Saturday, November 5, 2011

எளிய முறை கார்ன் சாலட்

தேவையானவை:

கார்ன் --- 2 கப்
ஹாலப்பினோ மிளகாய் - 1
உப்பு, மிளகுத் தூள் -தேவையான அளவு
மல்லித்தளை - பொடியாக நறுக்கியது - சிறிது


செய்முறை:
  • மக்காச் சோளத்தை உதிர்த்து(அல்லது frozen corn) சிறிது நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். microwave ல் 3 நிமிடம் வைத்தால் போதும்.
  • ஹாலப்பினோ மிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்க
    வும்.
  • தண்ணீரை வடித்து விட்டு அதில் நறுக்கி மிளகாய், மல்லித்தளை மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.


தக்காளியையும் விதை நீக்கி பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

Wednesday, September 14, 2011

பூக்கும் விடியல்கள்

விழிகளில்.............
நேற்றைய கண்ணீரின்
ஈரங்கள்

நினைவுகளில்............
நடந்து வந்த பாதையின்
நிஜங்கள்

காற்றில்................
ஊர்வலம் போயின
சில நினைவுகள்

நிஜங்களில்........
சிதைந்தன பல
எண்ணங்கள்

ஆத்மாக்களில்...........
தேடப்பட்டன பல
உறவுகள்
தேடல்களில்
தொலைந்து போனோம்
நாம்.........

போன காலங்களால்
புரிந்து கொள்வோம்
பூக்கும் விடியல்களின்
புதிய வரவை!
புதிய உறவை!

Tuesday, May 10, 2011

என் வீட்டு தோட்டத்தில்

இங்கே வந்து தோட்டம் போடணும்கற ஆசை ஒரு வழியா இந்த வருஷம் நிறைவேறுச்சு. ஃபிப்ரவரி மாசத்துலயே மண்ணு வாங்கி, பாத்தி கட்டி ஆரம்பிச்சாச்சு. இப்போ இருக்கற நிலவரம் இது.




Raised bed garden.
மஞ்சள்


வாழை
ஸ்பினாச்
வாழை & தண்டங்கீரை
பீர்க்கங்காய்
அவரை
கத்தரி
வெண்டைக்காய்
மிளகாய்
தக்காளி
மல்லி
பொன்னாங்கண்ணி கீரை
துளசி
செங்கீரை (கீரையே இல்லியேன்னு பாக்கறீங்களா, இதோ கீழ இருக்குது)

பறிச்சு பொரியல் பண்ணி சாப்டாச்சு. இந்தியா போயிட்டு வந்து அடுத்த update போடறேன். இந்தியா போயிட்டு Augustலதான் வரப்போறேன். அதனால ஒரு long leave.


Tuesday, April 19, 2011

அன்னாசி & தர்பூசணி ஜூஸ்


தேவையானவை


அன்னாசித்துண்டுகள் - 1 கப்
தர்பூசணித்துண்டுகள் - 1 கப்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை
  • எல்லா பொருள்களையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
வெயிலுக்கு ஏற்றது. ஐஸ் துண்டங்கள் வேண்டுமானால் சேர்க்கலாம்.


மேனகா கொடுத்த விருதுக்கு நன்றி!!


Tuesday, April 12, 2011

ஃப்ரூட் சாலட்(Fruit Salad)

இது மிகவும் சுலபமான மற்றும் சுவையான dessert.

தேவையானவை:
Whip Cream - 1 cup
மாம்பழக்கூழ் (Mango pulp) - 1/4 cup

பழக்கலவை - பொடியாக நறுக்கியது
(ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை.......)


செய்முறை:

  • விப் க்ரீமுடன் மாம்பழக்கூழை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜ்ல் வைக்கவும்.
  • பழங்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பழங்களை க்ரீம் கலவையுடன் கலந்து
சிறிது நேரம் ஃப்ரிட்ஜ்ல் வைத்து சாப்பிடலாம்.


ஒரு கப்பில் சிறிது பழங்கள், சிறிது க்ரீம்கலவை, பழங்கள், க்ரீம் கலவை என்று அடுக்கி சாப்பிடலாம்.


Sunday, February 13, 2011

வெஜ்ஜி பஃப் ஹார்ட்ஸ் (Vegetable puff hearts)


இது மகி செய்த வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் மாதிரியேதான் கொஞ்சம் மாற்றி செய்துள்ளேன். Valentine's day special

தேவையானவை
பஃப் பேஸ்ட்ரி ஷீட் - 1
முட்டை - 1

ஸ்டஃபிங் செய்ய:
உருளைகிழங்கு - 1
கேரட் - 1/2
காளிஃபிளவர் - 1/4
பீன்ஸ் - 5
பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1/4
தக்காளி - 1/2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மல்லித்தளை

செய்முறை
  • பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை 1 மணி நேரம் முன்பு ஃப்ரீஸரில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.
  • காய்களை நறுக்கி குக்கரில் வைத்து 2 விசில் விட்டு எடுக்கவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி மற்றும் மல்லித்தளையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய் , தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • வேக வைத்த காய்களை நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • வதங்கிய வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலந்து, மசித்த காய்களையும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிடவும்.
  • பிறகு பேஸ்ட்ரி ஷீட்டை விரித்து சிறிது மைதா மாவு தூவி தேய்த்து கொள்ளவும்.
  • கய்கறி மசாலாவை பேஸ்ட்ரி ஷீட்டில் நன்கு பரத்தவும்.
  • பிறகு அதன் ஒரு பக்கமிருந்து உள்புறமாக ரோல் செய்து பாதியில் நிறுத்தவும்.
  • அதன் மறுபுறம் இருந்தும் உள்புறமாக ரோல் செய்யவும்.
  • மத்தியில் இரண்டுபுறமிருந்தும் ரோல் செய்ததை ஒன்றன் மேல் ஒன்று இருக்குமாறு செய்து , பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி ஃப்ரீஸரில் சிறிது நேரம் வைக்கவும்.
  • பிறகு அதை வெளியில் எடுத்து கத்தியில் நறுக்கி பேக்கிங் ட்ரேயில் சிறிது இடம் விட்டு அடுக்கவும்.
  • முட்டையில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அடித்து எடுத்து , ட்ரேயில் வைத்த பஃப்ல் தடவவும்.
  • 400F முற்சூடு செய்த அவனில் 10 - 13 நிமிடம் வைத்து எடுக்கவும்.
முட்டை இல்லாமலும் செய்யலாம். எண்
ணெய் ஸ்ப்ரே செய்தால் போதும்.

Thursday, January 27, 2011

ஆலூ ஸ்பினாச் சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 1
ஸ்பினாச் - 1/2 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை:

  • உருளைக்கிழங்கையும் ஸ்பினாச்சையும் தனித்தனியாக வேக வைக்கவும்.
  • நன்கு கையால் மசித்துக்கொள்ளவும்.
  • அத்துடன் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஸ்பினாச் மற்றும் ஆலூ வேக வைத்த நீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  • மாவை நன்கு மூடி 1/2 மணி நேரம் வைக்கவும்.
  • பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக போட்டு எடுக்கவும்.

Monday, January 17, 2011

மொச்சைக்கொட்டை கத்தரிக்காய் குழம்பு


பொங்கல் எங்க ஊர்லயெல்லாம் பட்டிப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) தான் (2வது நாள்தான்) விஷேசமா இருக்கும். தோட்டத்துல பட்டி கட்டி அதுல கல் கூட்டி அடுப்பு செஞ்சு விறகெல்லாம் எடுத்துட்டு வந்து வெக்கனும். அப்பறமா மாடெல்லாம் கழுவி விட்டு அலங்காரம் பண்ணனும்.
அப்பறமா பட்டியில மாட்டுச்சாணி கொண்டு வந்து அதுல தெப்பக்குளம் கட்டணும். அப்பறம் பொங்கல் வெக்கணும்.

சாப்பிட பருப்பு, மொச்சைக்கொட்டை கத்தரிக்காய் குழம்பு, தட்டைப்பயறு அரசாணிக்காய் குழம்பு, ரசம், அரசாணிக்
காய் பொரியல், அவரைக்காய் பொரியல், ரசம், வடை, பாயசம், தயிர் இதெல்லாம் செய்யணும்.

இப்ப மொச்சைக்கொட்டை குழம்பு எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையானவை

மொச்சை - 1 கப்
கத்தரிக்காய் - 6 ( நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளிக்கரைசல் - 1/2 கப்

வதக்கி அரைக்க

சின்ன வெங்காயம் - 15
வரமிளகாய் - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்


செய்முறை
  • மொச்சையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு அதைக்கழுவி குக்கரில் வைத்து 6 விசில் விட்டு வேக விடவும்.
  • வதக்கி அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி நன்கு அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, அதில் அரைத்த விழுதில் பாதியை சேர்த்து , புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • அதில் வேகவைத்த மொச்சை மற்றும் மீதி உள்ள அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
மொச்சை குழம்பு ரெடி.

கடைசியாக சிறிது வேகவைத்த மொச்சையை அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாக வரும்.
தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

Sunday, November 28, 2010

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவையானவை

சாதம் உதிரியாக - 2 கப்
பச்சை கத்தரிக்காய் - 3 (நறுக்கியது)
கடுகு - சிறிது
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
எண்ணெய் - தேவைக்கு

அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லித்தளை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 7 அல்லது 8
புளி - சிறிது

செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து வைக்கவும்.
அப்பளம் அல்லது வடகம் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த நீளக்கத்தரிக்காய் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.(படம் google உதவி)

Wednesday, November 17, 2010

மோர்க்குழம்பு

இது காய் எதுவும் சேர்க்காமல் செய்யும் எளிமையான மோர்க்குழம்பு.

தேவையானவை
புளித்த மோர் - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு
எண்ணெய்

அரைக்க
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
  • அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அத்துடன் புளித்த மோர் , உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் கலந்து வைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாதத்துடன் அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.

Wednesday, November 3, 2010

ஒப்புட்டு (போளி)

இதுவும் கொங்கு ஸ்பெசல் இனிப்பு.

தேவையானவை
கடலைப்பருப்பு - 4 கப்
ஏலக்காய்த்தூள் - சிறிது
அச்சு வெல்லம் - 10 பெரியது.
மைதா மாவு - 2 1/2 கப்
சர்க்கரை - சிறிது.

நல்லெண்ணெய்.


செய்முறை

  • மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.(4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்)
  • கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும். குழையவிடக் கூடாது.
  • தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும்.
  • பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
  • சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்.
  • அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும்.


  • பிறகு அதை ரொட்டி போல் தட்டவும்.(1/4 இன்ச் தடிமனுக்கு இருக்க வேண்டும்)

  • நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.
  • தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.

சுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.


நாலைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

Tuesday, November 2, 2010

அதிரசம்(கச்சாயம்)


தேவையானவை

பச்சரிசி - 3 கப்
அச்சு வெல்லம் - 6 பெரியது
ஏலக்காய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
  • அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.
  • வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
  • அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
  • மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).
  • வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.
  • இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.
  • மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
  • 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

இதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.

Sunday, October 31, 2010

வெஜிடபிள் பீட்ஸா(Veggie Pizza)

என் பொண்ணுக்கு Schoolல 2 நாள் முன்னாடி பீட்ஸா craft பண்ணினாங்க. வீட்டுக்கு வந்ததும் இன்னிக்கு பீட்ஸா பண்ணனும், நாந்தான் ரோல் பண்ணி டாப்பிங் எல்லாம் போடுவேன்னு சொல்லிட்டா.
இது சுகந்தி & ஸ்ரீநிகா's Pizza.


தேவையானவை

பீட்ஸா பேஸ் செய்ய:

மைதா மாவு - 4 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
ட்ரை ஈஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

டாப்பிங்க்கு:
பீட்ஸா சாஸ்
மாஸரெல்லா சீஸ் - 1 பாக்கெட்
குடமிளகாய்
ஆலிவ்
ஹாலப்பினோ பெப்பர்
மஷ்ரூம்
வேற ஏதாவது காய் வேணும்னாலும் சேர்த்துக்கொள்ளலாம்.


செய்முறை
  • வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, உப்பு , ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
  • அதில் மைதா மாவு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். மாவு தளர்வாக இருக்க வேண்டும். 4 கப் மாவுக்கு 1 1/2 கப் தண்ணீர் சரியாக இருக்கும்.
  • மாவு இருக்கும் பாத்திரத்தை clear wrap கொண்டு மூடி வைக்கவும்.
  • 2 மணி நேரத்தில் மாவு இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.
  • அதை மறுபடியும் நன்றாக பிசைந்து, இரண்டாகப்பிரிக்கவும்.
  • ஒரு பகுதியை பிசைந்து சப்பாத்தி கட்டையில் பெரிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  • இது thin crust pizza. க்ரஸ்ட் திக்காக வேண்டுமென்றால் மாவும் திக்காக தேய்க்க வேண்டும்.
  • பீட்ஸா பானில்(pan) தேய்த்த மாவை வைத்து ஒரங்களை கையால் அழுத்தி விடவும்..
  • பீட்ஸா சாஸை தடவி அதன் மேல் வேண்டிய டாப்பிங்கை அடுக்கி, அதன்மேல் சீஸ் தூவி விடவும்.
  • 400 டிகிரி ஃபாரஹீட்டில் முற்சூடு செய்த அவனில் 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்யவும்.

இந்த அளவுக்கு 2 பீட்ஸா செய்யலாம். ஒரு வெஜ்ஜி பீட்ஸாவும் 1 ஆலிவ் பீட்ஸாவும் செய்தோம்.

Saturday, October 16, 2010

உருளைக்கிழங்கு வெண்டைக்காய் கறி

தேவையானவை


உருளைக்கிழங்கு - 2
வெண்டைக்காய் - 1/2 kg
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 சிறியது (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு


செய்முறை

  • உருளைகிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி பாதி வேக வைக்கவும்.
  • வெண்டைக்காயை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, சிறுதீயில் வைத்து நன்கு வதக்கி எடுக்கவும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  • அதில் தக்காளி சேர்த்து வதக்கி, வெண்டைக்காயை சேர்த்து மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும்.
  • கடைசியாக நிலக்கடலையை பொடித்து தூவி இறக்கவும்.

சப்பாத்தியுடன் சாப்பிட நல்லா இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். நிலக்கடலையை நன்றாக பொடிக்க கூடாது.

Wednesday, October 13, 2010

கோதுமை அல்வா



தேவையானவை

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள்
நெய் - 1 கப்
கனோலா எண்ணெய் - 1 கப்
முந்திரி - 15
உலர்ந்த திராட்சை - 15

செய்முறை
  • மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
  • நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
    எண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும்.
  • எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.


எப்பவும் கோதுமைப்பால் எடுத்து செய்ய, முதல் நாள்லருந்து வேலை செய்யனும். இது 1 1/2 மணி நேரத்துல செஞ்சறலாம். சுலபமான வேலை, சுவையாகவும் இருந்தது.


மைதா மாவிலயும் இதே போல செய்யலாம்.
மேலே இருக்கற படங்கள்ள 1 மைதா அல்வா 1 கோதுமை அல்வா எதுன்னு கரெக்டா சொல்றவங்களுக்கு அல்வா பார்சல்.

Tuesday, September 21, 2010

கடலை உருண்டை


தேவையானவை:

நிலக்கடலை - 2 கப்
வெல்லம் - 3/4 கப் (துருவியது)
நெய் - சிறிது

செய்முறை
  • நிலக்கடலையை நன்றாக வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
  • அதில் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு 4 அல்லது 5 முறை pulse பண்ணவும்.(நான் முழுசா தோல் நீக்க மாட்டேன், பாதி தோல் இருக்கற மாதிரி செய்வேன்)
  • ஒரளவு பறு பறுப்பாக இருக்க வேண்டும்.
  • அத்துடன் வெல்லத்துருவலை சேர்த்து மறுபடியும் ஒரு முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
  • இதை சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.

சத்தான கடலை உருண்டை ரெடி. என் கணவருக்கும், பொண்ணுக்கும் ரொம்ப பிடித்தது இது.

அதிகமாக நெய் சேர்க்கவேண்டியதில்லை. உருண்டை பிடிக்கும் போது கைகளில் தடவிக்கொண்டால் போதும்.

இனிப்பு தேவைக்கு ஏற்ப வெல்ல அளவை சரி செய்து கொள்ளலாம்.

கடலை வறுக்க(நிஜமாவே நிலக்கடலைதாங்க, வேற எதுவும் இல்ல) சுலபமான முறை அவனில் வைத்து எடுக்கலாம்

300F ல் 10 - 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும்.

சீக்கிரமா செய்ய வேண்டுமானால் microwave லும் செய்யலாம். microwave ல் 2 நிமிடம் வைத்து 3 நிமிடம் standing time கொடுத்து எடுத்தாலும் நன்றாக இருக்கும்.

Wednesday, September 15, 2010

கோதுமை(Multi Grain) ரொட்டி

தேவையானவை:
கோதுமை மாவு அல்லது multi grain மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1/2
குடமிளகாய் - 1/2
கீரை - 1 கைப்பிடி
முட்டைகோஸ் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தளை - சிறிது
(அனைத்தையும் பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், காய்களை வதக்கி வைக்கவும்.
  • மாவுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து, வதக்கி வைத்தவற்றையும் சேர்த்து , சிறிது சிறிதாக சுடு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  • சப்பாத்தி மாவை விட நன்கு தளர பிசைய வேண்டும்.
  • சப்பாத்தி கல்லை காய வைத்து, ஒரு உருண்டை மாவை எடுத்து கல்லில் வைத்து கையால் அழுத்தி ரொட்டி போல் செய்ய வேண்டும்.
  • இடை இடையே தண்ணீர் தொட்டு செய்தால் கையை சுடாமல் செய்யலாம்.
  • அல்லது ஒரு sheet ல் மாவை வைத்து ரொட்டியாக தட்டி எடுத்து சப்பாத்தி போல் சுட்டு எடுக்கலாம்.

இதில் கேரட்டும் துருவி சேர்க்கலாம்.

நான் sujatha brand multi grain flour உபயோகித்தேன். கோதுமை அல்லது ராகி மாவிலும் செய்யலாம்.

Friday, August 20, 2010

பூண்டு குழம்பு

தேவையானவை:


வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1 1/2டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)

செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து , நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.

சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும். செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தூம் செய்யலாம்.

Related Posts with Thumbnails