பொங்கல் எங்க ஊர்லயெல்லாம் பட்டிப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) தான் (2வது நாள்தான்) விஷேசமா இருக்கும். தோட்டத்துல பட்டி கட்டி அதுல கல் கூட்டி அடுப்பு செஞ்சு விறகெல்லாம் எடுத்துட்டு வந்து வெக்கனும். அப்பறமா மாடெல்லாம் கழுவி விட்டு அலங்காரம் பண்ணனும்.
அப்பறமா பட்டியில மாட்டுச்சாணி கொண்டு வந்து அதுல தெப்பக்குளம் கட்டணும். அப்பறம் பொங்கல் வெக்கணும்.
சாப்பிட பருப்பு, மொச்சைக்கொட்டை கத்தரிக்காய் குழம்பு, தட்டைப்பயறு அரசாணிக்காய் குழம்பு, ரசம், அரசாணிக்
காய் பொரியல், அவரைக்காய் பொரியல், ரசம், வடை, பாயசம், தயிர் இதெல்லாம் செய்யணும்.
இப்ப மொச்சைக்கொட்டை குழம்பு எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
தேவையானவை
மொச்சை - 1 கப்
கத்தரிக்காய் - 6 ( நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளிக்கரைசல் - 1/2 கப்
வதக்கி அரைக்க
சின்ன வெங்காயம் - 15
வரமிளகாய் - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை
- மொச்சையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு அதைக்கழுவி குக்கரில் வைத்து 6 விசில் விட்டு வேக விடவும்.
- வதக்கி அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி நன்கு அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, அதில் அரைத்த விழுதில் பாதியை சேர்த்து , புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
- அதில் வேகவைத்த மொச்சை மற்றும் மீதி உள்ள அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
மொச்சை குழம்பு ரெடி.
கடைசியாக சிறிது வேகவைத்த மொச்சையை அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாக வரும்.
தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.